TTD SAPTHAGIRI 2022 JANUARY TAMIL MAGAZINE DOWNLOAD | TTD eBooks Download
Language: Tamil
Year: 2022
மங்கலம் பொங்கும் பொங்கல்
இந்த உலகத்திற்கு ஒளியூட்டும் சூரியனின் நகர்வினை தட்சிணாயணம், உத்திராயணம் என்று கூறுவர். சூரியன் வடதிசை நகர்வு உத்திராயணமாகும். தென் திசை நகர்வு தட்சிணாயணமாகும். இந்த தட்சிணாயண காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையில் பகற்பொழுது குறைந்தும் இரவு பொழுது நீண்டும் காணப்படும். அதுமட்டுமின்றி காற்றும் மழையும் அதிகமாகக் காணப்படும். ஆடி மாதம்தான் சகல வஸ்துக்களும் முளைக்கும் காலமாகும். எனவே தான் விவசாயிகளும் இம்மாதத்தில் உழவு செய்யத் துவங்குகின்றனர். இது குறித்தே "ஆடிபட்டம் தேடி விதை" என்றனர் பெரியோர். ஆடி மாதத்தில் இருந்துதான் சூரியனில் இருந்து சூட்சும சக்திகளும் வெளிப்படும். எனவேதான் ஆடி மாதத்திலிருந்து வேத பாராயணமும், மந்திரங்களும் மேற்கொள்கிறோம். ஆதலால்தான் ஆடி மாதம் முதற்கொண்டு தட்சிணாயணம் நிறைவடையும் மார்கழி மாதம் வரை இறை வழிபாடுகளையும் விரதங்களையும் அனுசரிக்கின்றோம்.
ஆடி மாதத்தில் இறைவழிபாட்டோடு துவங்கும் தட்சிணாயணம் மார்கழி மாதத்தில் இறைவழிபாட்டுடனே முடிவடைகின்றது. ஆடி மாதம் போன்றே மார்கழி மாதமும் இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாக விளங்குகிறது. இம்மாதத்தில்தான் ஆண்டாள் ஸ்ரீகிருஷ்ணனை துதித்து விரதமிருந்து அந்த எம்பெருமானோடு ஐக்கியமானாள். ஸ்ரீகிருஷ்ண பகவானும் பார்த்தனுக்கு கீதை எனும் பொக்கிஷத்தை உபதேசித்த மாதமாகும். வைகுந்த வாசனான எம்பெருமானின் வைகுந்த வாசல் திறப்பதும் இம்மாதத்தில்தான். அதுமட்டுமின்றி தேவர்களுக்கு இது விடியற்காலை பொழுதாகும். அனைத்து ஆலயங்களும் விடியற்பொழுதே திறந்திருக்கும் மாதமும் இதுவே. உத்தராயணம் புண்ணிய காலமாவது போன்றே தட்சிணாயணமும் புண்ணிய காலமாகவே விளங்குகிறது.
பன்னிரு மாதங்களில் தட்சிணாயண முடிவும் உத்திராயண துவக்கமும் ஆன முறையே மார்கழி தை மாதங் களும் இறை வழிபாட்டிற்கு உகந்தி, சிறந்த மாதங்களாகும். மார்கழி எப்படி தேவர்களுக்கு சிறந்ததோ, தை மாதம் மானிடர்களின் மேன்மைக்கு வழி வகுக்கும் மாதமாகத் திகழ்கின்றது. சான்றோரும் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றே கூறியுள்ளனர்.